கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்தால். உடனே நடவடிக்கை.


"இரண்டு வருடத்திற்கு முன்பு, மழை நீரை சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கினோம். ஆனால், தற்போது அந்த ஏரியில் தண்ணீருக்கு பதில் குப்பைகள் மட்டுமே இருக்கிறது. குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என்று மக்களிடம் சொல்லியும், கேட்கவில்லை. ஏனெனில், அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டி கிடையாது. இந்த தவறுகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. கலெக்டரிடம் மனு மூலம் தெரியப்படுத்தலாம் என்று அலுவலகத்திற்குச் சென்றேன். மனுவை கொடுக்க வரும் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் அந்த கூட்டத்தில் நின்றும், கலெக்டரை பார்த்து மனுவை கொடுக்க முடியவில்லை". என்கிறார் மூர்த்தி (சமூக ஆர்வலர்)

இதுபோன்று நிறைய பிரச்சனைகளை, கலெக்டருக்கு மனு மூலம் தெரியப்படுத்த மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் மனு கொடுப்பதற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்துவருகிறது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் மூலம், கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்துவிடுகிறார்கள்.  24 மணி நேரத்திற்குள், அதற்கான பதிலும் வருகிறது. பதில் மட்டும் தானா?. இல்லை. பிரச்சனைக்கான நடவடிக்கைகளையும், உடனே அப்டேட் செய்கிறார்கள்.

இந்த சேவையை எப்படி செய்கிறார்கள்?..
மழை காலங்களில், வெள்ள நிவாரணத்திற்காக தொடங்கப்பட்ட 24 மணி நேர கன்ட்ரோல் அறையில் இந்த சேவையை செய்துவருகிறார்கள். மக்களிடம் இருந்து, பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வரும்பொழுது அதை கலெக்டரின் நேர்முக உதவியாளர் படித்து கலெக்டரிடம் தெரியப்படுத்துகிறார். அதன்பிறகு, கலெக்டரின் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. தகவல் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து பதிலை பெற்று மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

எதிர்காலத்தில், இந்த சேவையை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்காக ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனையும் உருவாக்கி வருகிறார்கள். அப்ளிகேஷன் மூலம் அனுப்பும் தகவல்கள் நேரடியாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றுவிடுமாம்.

என்ன செய்ய வேண்டும்?.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் +917806917007 என்கிற மொபைல் நெம்பருக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம்.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் "District Collector Erode" என்கிற பெயரில் இருக்கும் பக்கத்தில் பிரச்சனைகளை பதிவு செய்யலாம்.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இயங்கி வரும் இந்த சேவையை, மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தினால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.